திங்கள், 24 நவம்பர், 2008

திருப்பரங்குன்றத்தில் பலர் பார்க்காத அமைதியான அழகிய மலைகோவில் காசிவிஷ்வநாதர் ஆலயம் .

நேற்று கல்லூரியில் செமஸ்டர் தேர்வு முடிந்த பிறகு நண்பர்கள் மற்றும் நண்பிகளோடு திருப்பரங்குன்றத்திற்கு சென்றோம். திருமங்கலம் பகுதியை சேர்ந்த தோழி மலைக்கு பின் புறம் உள்ள மலை கோவிலுக்கு போகலாம் என்றாள்.நாங்கள் செல்லும் வேளையில் மழை தன் வேலையை காட்டிகொண்டிரிந்தது.

நாங்கள் கோவிலுக்கு சென்ற சாலையில் நாங்கள் மட்டுமே தனியே போய்கொண்டிரிந்தோம் .எனக்கு உள்ளுக்குள் திகிலாய் இருந்தது இருந்தாலும் வழக்கம்போல் உடன் வருபவர்களை கலாய்த்து கொண்டு சென்றேன்.

ஏற்கனேவே கோவையில் மருதமலை ,அனுவாவி சுபரமனியர் கோவில் போன்ற இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.நான் மதுரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலை எப்படி தவற விட்டேன் என தெரியவில்லை .அழகர் கோவில் ஒன்றுதான் மதுரையில் இயற்கை எழில் சூழ்ந்த இடம் என நான் நினைத்திருந்தது என்னுடைய தவறு என்பதை காசி விச்வநாதர் ஆலயம் கூறுவதை போல் கோவிலுக்கு எதிரே அமைந்திருந்த கண்மாய் பசுமையாக காட்சியளித்தது.
மலை அடிவாரத்தில் ஒரு கடை கூட இல்லாமல் அமைதியாக இருந்தது அனுவாவி கோவிலை நினைவு படுத்தியது.படியேறுவதற்குள் கால்கள் தளர்ந்து போய் விடுமோ என்று என்ன தோன்றும்படி செங்குத்தான படிகள் பள்ளிகட்டு சபரி மலைக்கு என்னும் பாடலை நினைவு படுத்தியது.

மழை பெய்ததால் மலையின் வழியே வழிந்தோடிவந்த மழை நீர் பார்க்க நன்றாக கண்களுக்கு குளுமையாக இருந்தது.சாரல் மழையின் நடுவே நனைந்து கொண்டு அந்த படிகளின் வழியே ஏறினோம் .வழியில் ஆங்காங்கு இருந்த பாறைகளின் மேல் நின்று நண்பர்கள் புகைப்படம் எடுத்து கொண்டோம்.

பெண்கள் தனியே தத்தம் தோழிகளுடன் புகை படம் எடுத்து கொண்டனர் .
நாங்கள் மழை காலத்தில் செல்லும்போதே மலை ஏறுவது கடினமாக இருக்கிறது .வெயில் காலத்தில் இங்கு சென்று திரும்புவது மிக கடினம்.குடிநீருக்காக போடப்பட்ட பல குழாய்கள் நம் மக்களின் கைங்கரியத்தால் காணாமல் போய் விட்டன .

தண்ணீருக்காக மிகவும் சிரமபட்டோம் கடைசியில் மலை மீது இருந்த ஒருகடையில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கினோம்.குடிக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவலம் என்று மாற போகிறதோ!

இப்படி பலவித தடங்கல்கள் இருந்தாலும் மலையேறும் பொது உடன் வந்த நண்பர்களுடன் சந்தோசமாக பேசி சிரித்தபடி மலை ஏறியது நல்ல அனுபவமாக இருந்தது.சீன மொபைல்களில் நம் தமிழ் படங்களின் பாடல்களை கேட்டு கொண்டே ரசித்தபடி அவரவர் கோணங்களில் ஏதோ மிக பெரிய சினிமா விமர்சகர் போல் திரை படங்களை பற்றி விவாதித்து கொண்டு சென்றோம்.

கோவிலுக்கு செல்லும்போதாவது இது போல் திரைப்படங்களை பற்றி பேசாது செல்வது நம்மால் முடியாதோ என்று தோன்றுகிறது.மலையில் நிறைய மரங்கள் இல்லை என்றபோதும் குளிர் கொடைக்கானலை நியாபகப்படுத்தியது.

மொத்தம் அறநூறு படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் என் முழங்கால் உயரம் இருந்தது .ஏறி இறங்கியதும் ஒன்றும் தெரியவில்லை .இன்றுதான் தொடை வலிக்க ஆரம்பித்துள்ளது.

  இவ்வளவு சிரமத்தின் நடுவேயும் மேலே சென்று இறைவனை கண்டவுடன் மனதில் ஏற்பட்ட அமைதியை சொல்ல வார்த்தைகள் இல்லை .அமைதி தவழும் அன்னை விசாலாட்சியின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.

இப்படி மிகவும் மகிழ்ச்சியாய் எங்கள் பயணம் அமைந்தது .மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருபரங்குன்றத்திற்கு செல்ல நேர்ந்தால் சரவண பொய்கை அருகேயுள்ள இதனை காண தவறாதிர்கள் .

வரவங்க இந்த கோவில் குறித்து பலர் தெரிந்து கொள்ள ஓட்டு போட்டு இந்த பதிவ பாப்புலர் ஆக்குங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக